இந்தியா செல்லவுள்ள உக்ரைன் ஜனாதிபதி ; அழைப்பு விடுத்த மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக, இந்தியாவுக்கான உக்ரைன் துாதுவர் ஒலக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
அழைப்பு விடுத்த மோடி
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா அதிக ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகிறது. ரஷ்யாவுடனான நீண்டகால உறவால், போர் நிறுத்த அமைதி பேச்சில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருவதாக நாங்கள் கருதுகிறோம்.
ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இந்தியாவின் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்க நாங்கள் வலியுறுத்துகிறோம். வரும் செம்படம்பரில் நடைபெற உள்ள ஐ.நா., பொது சபை கூட்டத்தின் போது, போரை முடிவுக்கு கொண்டு வரும் பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு,பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு, உக்ரைன் ஜனாதிபதி தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதன்போது இந்திய பிரதமர் ஜனாதிபதியை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.இதற்கான இரு தரப்பு பணிகளும் தொடங்கியுள்ளதால், பயணத்திகதி விரைவில் இறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.