வெளிநாடுகளில் வசிக்கும் கனேடியர்களின் கோரிக்கை
வெளிநாடுகளில் வசிக்கும் கனேடியர்கள், அந்நாட்டு பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
வாக்களிப்பில் உள்ள தடைகள் தேர்தல் முடிவுகளையும் பாதிக்கக்கூடும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
“Grits Abroad” எனப்படும் அமைப்பின் இயக்குநர் டிமோத்தி வீல் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் கனேடியர்கள் வசித்து வருகிறார்கள், அதில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க தகுதியுடையவர்கள். எனினும், வெளிநாட்டு வாக்காளர்களின் பங்கேற்பு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அதற்கான முக்கிய காரணங்களாக அஞ்சல் மூலம் மட்டுமே வாக்களிக்கும் நடைமுறை, குறுகிய தேர்தல் காலம், வாக்குச்சீட்டு தாமதம் குறித்த அச்சங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கவனயீனம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வாக்காளர்களை அரசியல் கட்சிகள் ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்றும், தூதரகங்கள் அல்லது உயர்ஸ்தானிகர் அலுவலகங்களில் நேரடியாக வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என வீல் கூறியுள்ளார்.
சில நாடுகளில் போல ஆன்லைன் வாக்குப்பதிவு முறையும் அறிமுகப்படுத்தப்படலாம் என பரிந்துரை செய்துள்ளார்.
37 நாட்கள் மட்டுமே கொண்ட தேர்தல் காலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு பொருத்தமானதல்ல.
விண்ணப்பம், அங்கீகாரம், அஞ்சல் அனுப்புதல் மற்றும் திருப்பி அனுப்புதல் போன்ற செயல்முறைகள் பல நாடுகளின் அஞ்சல் அமைப்புகள் மூலம் நடைபெறுவதால் சிக்கல்கள் அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு 101,690 வாக்கு தொகுப்புகள் அனுப்பப்பட்டன. இதில் 57,440 தொகுப்புகள் மட்டுமே காலவரையறைக்குள் திரும்பி வந்து எண்ணப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டுகள் தாமதமாக வருவதை தவிர்க்க, தேர்தல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டத்தின் படி, தேர்தல் காலம் குறைந்தது 37 நாட்களும் அதிகபட்சம் 51 நாட்களும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.