புற்றுநோய் வழக்கு: Johnson & Johnson நிறுவனத்துக்கு மாபெரும் அபராதம்
உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தப்பட்ட ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) நிறுவனத்தின் டால்க் பவுடர் (Talc Powder) புற்றுநோய் வழக்கில், அமெரிக்க நீதித்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு இழப்பீடாக, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் $966 மில்லியன் (சுமார் ரூ. 8000 கோடி) செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் குழு (Jury) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்புக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் மேல்முறையீடு
தங்கள் நிறுவனத்தின் டால்க் பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் ‘ஆஸ்பெஸ்டாஸ்’ (Asbestos) இருப்பதாக தெரிந்தும், அதுபற்றி வாடிக்கையாளர்களை எச்சரிக்காமல், பல ஆண்டுகளாக விற்பனை செய்ததாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பவுடரைப் பயன்படுத்தியதன் விளைவாக, மீசோதெலியோமா (Mesothelioma) என்ற அரிய வகை புற்றுநோயால் உயிரிழந்த ஒரு பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் லாபத்திற்காக மக்களின் ஆரோக்கியத்தைக் அக்கறை செலுத்த தவறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், $966 மில்லியன் அபராதம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் , மற்ற நிறுவனங்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான டால்க் புற்றுநோய் வழக்குகளை எதிர்கொண்டு வரும் ஜான்சன் & ஜான்சனுக்கு, இந்த புதிய தீர்ப்பு மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடுகளைத் தர வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இந்த தீர்ப்புக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.