கிரீன்லாந்துக்கு கனடிய படைகளை அனுப்ப பரிசீலனை – பிரதமர் மார்க் கார்னி
நேட்டோ (NATO) கூட்டாளிகளுடன் இணைந்து கிரீன்லாந்தில் இராணுவ பயிற்சிகளில் பங்கேற்க கனடிய படைகளை அனுப்புவது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி பரிசீலித்து வருகிறார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்கி கட்டுப்பாட்டில் எடுக்க அனுமதிக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கு சுங்க வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் அவசரத் திட்டங்கள் (contingency plans) தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக, கனடாவின் இரு மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ராயல் கனடிய விமானப்படை (RCAF) ஏற்கனவே முன் திட்டமிடப்பட்ட நொராட் பயிற்சியின் ஒரு பகுதியாக கிரீன்லாந்தில் பங்கேற்று வருகிறது.
ஆனால், டென்மார்க் அரசு நடத்த திட்டமிட்டுள்ள இறையாண்மையை (sovereignty) உறுதிப்படுத்தும் பயிற்சிகளில் கூடுதல் கனடிய படைகளை அனுப்பலாமா என்பதையும் பிரதமர் கார்னி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.
இந்த பயிற்சிகளில் கிரீன்லாந்தின் முக்கிய கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கான ஒத்திகைகளும் இடம்பெறக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
டிரம்ப் நிர்வாகத்தின் எதிர்வினை மற்றும் அரசியல் விளைவுகளை கருத்தில் கொண்டு, கனடா அரசு எந்த திசையில் முடிவு எடுக்கும் என்பது இன்னும் தெளிவில்லை என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேவைப்பட்டால், சிறிய அளவிலான கனடிய படைப்பிரிவை இந்த வார இறுதிக்குள் கிரீன்லாந்துக்கு விமானம் மூலம் அனுப்ப முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.