அமெரிக்க ஒப்பந்தம் கனடாவிற்குப் பயனளித்திருக்காது –மார்க் கார்னி
அமெரிக்காவுடன் முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் கனேடிய மக்களுக்குப் எவ்வித பயனையும் அளித்திருக்காது என்பதால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடியப் பிரதமர் மார்க் கார்னி மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கியூபெக்கின் லெவிஸ் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
அமெரிக்காவுடனான எங்களது வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கமே கனேடிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள மற்றும் சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதுதானே தவிர, எந்தவொரு காலக்கெடுவுக்குள்ளும் அல்லது எந்த நிபந்தனையிலும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது அல்ல என தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில் பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அந்த வேகம் தலைகீழாக மாறியது.
அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதுடன், அவர்கள் கேட்ட சலுகைகளையும் எங்களால் வழங்க முடியாமல்போனது என பிரதமர் கார்னி தெளிவுபடுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, கனடாவின் தேசிய நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது என்ற தனது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் மார்க் கார்னி இதன் மூலம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.