கனடிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்
கனடா பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் தொடக்கத்தில் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனுக்கு பயணம் செய்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்-ஐ சந்திக்கவுள்ளார்.
பிரதமரானதிலிருந்து இதுவே அவரது இரண்டாவது அமெரிக்க விஜயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு, அமெரிக்கா விதித்த கடும் சுங்க வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில், மேலும் கனடா–அமெரிக்கா–மெக்சிகோ ஒப்பந்தம் (CUSMA) மறுபரிசீலனை தொடங்கப்பட்டிருக்கும் சூழலில் நடைபெறுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக வர்த்தகப் போரைத் தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி, மரம், எஃகு, அலுமினியம், வாகன உற்பத்தி, செம்பு போன்ற துறைகளில் கடும் சுங்க வரிகளை விதித்திருந்தார்.
கனடா மற்றும் அமெரிக்கா பல மாதங்களாக புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
“சிறந்த ஒப்பந்தம் பெறுவது தான் எங்கள் முன்னுரிமை, விரைவான ஒப்பந்தம் அல்ல” என்று கார்னி வலியுறுத்தி வருகிறார்.
கடந்த மாதம், கார்னி அரசு பல எதிர்-சுங்க வரிகளை நீக்குவதாக அறிவித்தது. அப்போது பத்திரிகையாளர்கள், இந்த நடவடிக்கை பேச்சுவார்த்தையை எளிதாக்குமா என்று கேட்டபோது, டிரம்ப் “ஆம்” என்று உறுதிபடுத்தியதாக கார்னி தெரிவித்தார்.