அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்... கனடா பிரதமர் எச்சரிக்கை
Carney says Canada could turn to Chinese automakers if Trump trade talks fail: டிரம்புடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், வாகன உற்பத்தி தொடர்பில் சீனா பக்கம் திரும்ப நேரிடும் என்று கூறியுள்ளார் கனடா பிரதமர்.
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்புடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், வாகன உற்பத்தித் துறை தொடர்பில் சீனா, ஐரோப்பா அல்லது ஜப்பான் பக்கம் திரும்ப நேரிடும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.
உச்சி மாநாடு ஒன்றிற்காக கம்போடியா சென்றுள்ளார் கனடா பிரதமரான மார்க் கார்னி.

அப்போது ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளால் வட அமெரிக்க வாகன உற்பத்திச் சந்தை பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை என்றாலும், அதில் கனடாவின் வாகனத் துறைக்குப் பாதுகாப்பான உடன்பாடு எட்டப்படாவிட்டால் கனடா மாற்று வழிகளைத் தேட நேரிடும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் கனடா பிரதமர்.
சீன முதலீடுகளை அமெரிக்காவுக்கு எதிரான பேரம் பேசும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறீர்களா என ஊடகவியலாளர்கள் கேட்க, அந்தக் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் கார்னி, இது பேரம் பேசும் உத்தி அல்ல; இது நடவடிக்கைக்கான எதிர் நடவடிக்கை என்று பதிலளித்துள்ளார்.
அதே நேரத்தில், சீன வாகன நிறுவனங்கள் கனடாவில் முதலீடு செய்தால், அவை வெறும் உதிரிபாகங்களை மட்டும் இணைக்கும் இடமாக இல்லாமல், கனடாவிலேயே முழுமையான தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில், சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை கனடா பிரதமர் கார்னி சந்திக்கவுள்ள நிலையில், அவரது இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.