Chat GPT மீது வழக்கு ; தவறான முடிவுக்கு தூண்டியதாக குற்றச்சாட்டு
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி, பயனர்கள் சிலரை தற்கொலைக்கு துாண்டிய குற்றச்சாட்டில், அந்நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் ஏழு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓபன் ஏ.ஐ., நிறுவனம் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை, 2022ல் அறிமுகப்படுத்தியது.

மனநல பாதிப்புகள்
இதில், கேள்வி - பதில் முறையில் அனைத்து விஷயங்கள் பற்றிய தகவல்களை பெறலாம். படத்தை உருவாக்கலாம்; கோப்புகளை ஆராயலாம்.
இந்நிலையில், சாட்ஜிபிடி தற்கொலைக்கு துாண்டியதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சமூக வலைதளத்தால் பாதிக்கப்பட்டோர் சட்ட மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு: ஓபன் ஏ.ஐ., நிறுவனம் ஜி.பி.டி., 4ஓ எனும் பதிப்பை தகுந்த ஆய்வுகள் இல்லாமல் வெளியிட்டது.
இது முட்டாள்தனமாகவும், மனரீதியாக ஒருவர் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் இருப்பதாக, அந்நிறுவனத்தில் உள்ளேயே எச்சரிக்கை குரல்கள் எழுந்தன. அதை பொருட்படுத்தாமல் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதனால், நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர். அமவுரி லேசி, 17, என்பவரின் தற்கொலையில் கயிற்றை எப்படி சுருக்கு போட வேண்டும் என்று கூட சாட்ஜிபிடி தெரிவித்துள்ளது.
எனவே, தற்கொலைக்கு துாண்டிய ஓபன் ஏ.ஐ., நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.