கனடாவில் தற்காலிக குடியேறிகள் எண்ணிக்கை குறைப்பிற்கு எதிர்ப்பு
கனடாவில் தற்காலிக குடியேறிகள் எண்ணிக்கை குறைப்பிற்கு கியுபெக் மாகாண அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
கனடாவின் குவெபெக் மாகாணம் பல ஆண்டுகளாக ஓட்டாவாவிடம் தற்காலிக குடியேற்றங்களை குறைக்க வேண்டுமெனக் கோரிவந்த நிலையில், இப்போது அதே மாகாணம் “மத்திய அரசாங்கம் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டுள்ளது” என குற்றம் சாட்டியுள்ளது.
குவெபெக் குடியேற்ற அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசு தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க எடுத்த முயற்சிகள் மாகாணத்தின் பல பிரதேசங்களில் உள்ள தொழில் நிறுவனங்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் தீர்மானங்களை புரிந்து கொள்ள முடியவில்லை எனுவும், நெருக்கடிநிலையை உருவாக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது, தற்காலிக குடியேற்றங்களை குறைக்க ஓட்டாவாவைத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த குவெபெக் அரசின் அணுகுமுறையில் பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
முதல்வர் பிரான்சுவா லெகோ இதற்கு முன்பு, தற்காலிக குடியேற்றிகள் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் பிரஞ்சு மொழியில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தார்.
ஆனால் அண்மைய மாதங்களில், புதிய மத்திய அரசின் கட்டுப்பாடுகள் கியுபெக்கில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என தொழில் உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சம் தேடுபவர்கள் மற்றும் கூட்டாட்சி கட்டுப்பாட்டில் உள்ள பிற தற்காலிக குடியேற்றிகள் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றே தாம் விரும்புவதாகவும், ஆனால் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் எந்தக் குறைப்பையும் தாம் கோரவில்லை எனவும் கியுபெக் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.