89 நாடுகள்: Omicron தொடர்பில் மீண்டும் எச்சரித்த WHO
இதுவரை உலகின் 89 நாடுகளில் கொரோனா பெருந்தொற்றின் Omicron மாறுபாடு பரவியுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கையில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள நாடுகளில் Omicron மாறுபாடு வேகமாக பரவுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
இது தடுப்பூசிகளின் செயல்திறன் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டுமின்றி, மிக ஆபத்தான மாறுபாடாக அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடை விடவும், ஓமிக்ரான் மாறுபாடானது மிக வேகமாக பரவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் மாறுபாடு தொடர்பில் போதிய தரவுகள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், அதன் பரவும் வேகம் உண்மையில் கவலை அளிப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, பிரான்சில் கொரோனா பாதிப்பால் 3,000 மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமுலுக்கு கொண்டுவர ஆயத்தமாகி வருகின்றனர். ஆஸ்திரியா, பிரான்ஸ் நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
பாரிஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டென்மார்க்கில் திரையரங்குகள், கச்சேரி அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அயர்லாந்தில் பப்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு இரவு 8 மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.