ஒன்றாரியோவில் திருட வந்தவர்களை சுட்ட இளைஞருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு
வீட்டில் திருடுவதற்காக வந்த நபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இளைஞருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணம், மில்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அலி மியான் என்ற 22 வயதான இளைஞரே இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19ம் திகதி இரண்டு சந்தேக நபர்கள் வீட்டை கொள்ளையிட முயற்சித்த போது குறித்த இளைஞர் சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது ஒரு சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர் மீது பொலிஸார் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இதேவேளை, ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் வீட்டுக்குள் அத்து மீறி பிரவேசித்து கொள்ளையிட முயற்சித்த போது தற்காப்பு நோக்கில் தமது கட்சிக்காரர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் தவறில்லை எனவும் அலியின் சட்டத்தரணி தெரிவிக்கின்றார்.
அனுமதிப்பத்திரம் உடைய துப்பாக்கி ஒன்றின் ஊடாக இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.