கனடாவில் 100,000 பிரித்தானிய குழந்தைகள் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம்
கனடாவில் 100,000 பிரித்தானிய குழந்தைகள் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கனடா மன்னிப்புக் கேட்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
1869க்கும் 1948க்கும் இடையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரித்தானிய குழந்தைகள், ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்து கனடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் பண்ணை வேலையாட்களாகவும், வீட்டு வேலை செய்வோராகவும் ஆக்கப்பட்ட நிலையில், அவர்களில் பலர் மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள், துஷ்பிரயோகமும் செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆனால், இதுவரை கனடா அதற்காக மன்னிப்புக் கேட்டதில்லை.
தற்போது மன்னர் சார்லஸ் கனடா சென்றுள்ள நிலையில், கனடா தனது மனதை மாற்றிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு என பாதிக்கப்பட்ட குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சார அமைப்பு தெரிவித்துள்ளது.
கனடா சென்றுள்ள மன்னர் சார்லஸ், இந்த பயணத்தை பயன்படுத்திக்கொண்டு கனடாவை மன்னிப்புக் கோர வலியுறுத்தவேண்டும் என்கிறார் பிரச்சாரகர்களில் ஒருவரான ஜான் ஜெஃப்கின்ஸ் என்பவர்.
ஜானுடைய தந்தையான பெர்ட், பிரித்தானியாவிலிருந்து கனடாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட 115,000 பிரித்தானியக் குழந்தைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.