லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பரபரப்பு; வதந்தியால் 20 பேருக்கு சிகிச்சை!
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள ஒரு முனையம் (Terminal) பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ரசாயன கசிவு’ என்று பரவிய பீதி காரணமாக பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்தச் சம்பவத்தால் 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
ரசாயன கசிவு அல்ல, வெகுஜன ஹிஸ்டீரியா
எனினும், விசாரணைக்குப் பிறகு, இது ஒரு ரசாயன கசிவு அல்ல, மாறாக ‘வெகுஜன ஹிஸ்டீரியா’ (mass hysteria) என்று கூறப்படுகிறது. சில பயணிகள், முனையம் 4-இல் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுவாசக் கோளாறு மற்றும் எரிச்சல் ஏற்பட்டதாக அவசர சேவை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவல் பரவியதால், ஆயிரக்கணக்கான பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. உடனடியாக, தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர சேவை குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
ரசாயன கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முனையம் முழுவதும் அவசரமாக வெளியேற்றப்பட்டது. பல மணிநேர விசாரணைக்குப் பிறகு, காவல்துறையும் தீயணைப்புப் படையினரும் அந்த இடத்தில் எந்தவிதமான ரசாயனப் பொருளோ அல்லது அபாயகரமான திரவமோ இல்லை என்று உறுதிப்படுத்தினர்.
இந்த உளவியல் ரீதியான விளைவால், சிலருக்கு உடல் ரீதியான அறிகுறிகள் தோன்றியதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமான நிலையம் உடனடியாக அதன் செயல்பாடுகளை நிறுத்தி வைத்தது.
பின்னர், முனையம் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், இந்தச் சம்பவம் விமானப் பயணங்களை முடக்கி பயணிகளை அச்சமடைய வைத்துள்ளது.
மேலும் சம்பவத்தின் பின்னனியின் சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.