லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்
இங்கிலாந்தின் லண்டன் சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்ற ‘லீ மான்ஸ் கப்’ கார் பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் ‘லீ மான்ஸ் கப்’ தொடரின் சில்வர்ஸ்டோன் சுற்றுப் போட்டியையே முதலமைச்சர் விஜய் இன்று பச்சைக்கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இலங்கை நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி இரவு 11.45 மணிக்கு நிறைவடைய உள்ளது.

பந்தயத்திற்கு முன்னதாக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் இருவரும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் அஜித்குமாருக்கு கைகொடுத்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இருவரின் சந்திப்பு மற்றும் பந்தயத்தை விஜய் தொடங்கி வைத்த காட்சிகள் தொடர்பான காணொலிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனால் இருவரது ரசிகர்களும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
இதனிடையே, முதலமைச்சர் விஜய்யின் வருகை குறித்து நடிகர் அஜித்குமார் கூறுகையில், தனது பிஸியான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டனுக்கு வந்தமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், தானும் விஜய்யும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி இருப்பதாகவும் அஜித்குமார் குறிப்பிட்டார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தனது அழைப்பை ஏற்று லண்டனுக்கு வந்து பந்தயத்தை தொடங்கி வைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மோட்டார் பந்தயக் களத்தில் நடைபெற்ற இந்த விஜய்–அஜித் சந்திப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.