கனடாவில் கோர விபத்து: 8 வயது சிறுமி பலி
கனடாவின் ஒட்டாவா நகருக்கு தெற்கே உள்ள ஆஸ்கூட் (Osgoode) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட கார் விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11:50 மணியளவில் டால்மெனி சாலை மற்றும் நிக்சன் டிரைவ் சந்திப்பில் ஒரு பிக்கப் டிரக் மற்றும் எஸ்யூவி ரக கார் ஆகிய இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது குறித்து அவசரகால மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
படுகாயமடைந்த ஒரு சிறுமி மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒட்டாவா துணை மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

மாலையில், எஸ்யூவி காரில் பயணம் செய்த அந்த 8 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது.
மேலும், அதே காரில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிக்கப் டிரக்கில் இருந்த மற்றொரு 6 வயது சிறுமி லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஒட்டாவா மற்றும் லீட்ஸ் & கிரென்வில் பகுதிகளைச் சேர்ந்த அவசரகால மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதே சந்திப்பில் இந்த மாதத்தில் நடக்கும் இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். கடந்த ஜூன் 19ம் திகதி, இதே சந்திப்பில் ஒரு செடான் கார் மற்றும் பிக்கப் டிரக் மோதிய விபத்தில் ஒரு சிறுவன் விமானம் மூலம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது தங்களின் காரில் உள்ள டேஷ்கேம் காட்சிகளை வைத்திருப்பவர்கள் ஒட்டாவா காவல்துறையின் விபத்து புலனாய்வுப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.