சிலியில் காட்டுத் தீ காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்
மத்திய மற்றும் தென் சிலி பகுதிகளில் இன்று பரவிய கொடிய காட்டுத் தீயால் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் வெப்ப அலை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் எரிந்து நாசமடைந்ததுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
நாட்டின் தலைநகர் சாண்டியாகோவிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள பியோபியோ மத்திய மாகாணம் மற்றும் அண்டை நியூபிள் மாகாணங்களில் “பேரழிவு நிலை” (State of Catastrophe) அறிவிக்கப்பட்டுள்ளதாக சிலி ஜனாதிபதி காப்ரியல் போரிக் அறிவித்துள்ளார்.

இந்த அவசர நிலை அறிவிப்பின் மூலம் அரசியலமைப்பு உரிமைகளில் சிலவற்றை இடைநிறுத்தவும், இராணுவத்துடன் இணைந்து செயல்படவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை 8,500 ஹெக்டேர் (சுமார் 21,000 ஏக்கர்) நிலப்பரப்பு தீயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20க்கும் மேற்பட்ட காட்டுத் தீ இன்னும் கட்டுப்படுத்தப்படாமல் உள்ளது என தேசிய வனத்துறை தெரிவித்துள்ளது.
பியோபியோ மாகாணத்தின் கொன்செப்சியோன் நகரில் செய்தியாளர்களை சந்தித்த ஜனாதிபதி போரிக், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
மேலும், இதுவரை 18 பேர் உயிரிழந்ததாகவும், 300 வீடுகள் அழிந்ததாகவும் கூறப்பட்டுள்ள எண்ணிக்கைகள், பாதிப்பு மதிப்பீடு தொடரும் நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.