20 மில்லியன் இளைஞர்கள்... சீனா தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்
சீனாவில் பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் 16 முதல் 24 வயதுடைய 20 மில்லியன் இளைஞர்கள் தற்போது வேலையில்லாத நெருக்கடியில் தவிப்பதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
சீன அரசின் உத்தியோகப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் நகரங்களில் வாழும் இளையோர்களின் மொத்த எண்ணிக்கை 107 மில்லியன் என்றே கூறப்படுகிறது. சீனாவில் தற்போது கொரோனா பரவல் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் கண்டிருக்கும் நிலையிலேயே இந்த வேலையில்லா திண்டாட்டம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சீனாவில் இளைஞர் வேலையின்மை விகிதம் இந்த ஆண்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மார்ச் மாதத்தில் 15.3 சதவீதத்திலிருந்து ஏப்ரலில் 18.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 19.9 சதவீதமாக உச்சம் கண்டுள்ளது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக திறமையான இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் வேலையில்லாத சூழலில் உள்ளனர். மட்டுமின்றி, பொருளாதார நெருக்கடி காரணமாக முதன்மையான நிறுவனங்கள் பல ஊழியர்களை வேலையில் இருந்தும் நீக்கி வருகிறது.
இது இவ்வாறு இருக்க, பிறக்கும் புத்தாண்டு மேலும் அதிக நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே கூறுகின்றனர். அடுத்த ஆண்டில் புதிதாக பட்டம் பெற்று 11.6 மில்லியன் இளையோர்கள் வேலை தேடி களமிறங்குவார்கள்.
சீனாவை பொறுத்தமட்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பு நெருக்கடி ஆளும் இடதுசாரி அரசுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.