உய்குர் மக்கள் நிலை கவலையளிக்கிறது: சீன அரசுக்கெதிராக குற்றச்சாட்டு
மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் சீனா இனப்படுகொலை செய்துள்ளது என ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் குடியிருக்கும் உய்குர் இஸ்லாமிய மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு உள்ளது. சீன மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன கம்யூனிச அரசு சிறுபான்மையினரான இந்த உய்குர் மக்களை குறிவைப்பதாக அமெரிக்க ஊடகங்களும் குற்றம்சாட்டி வந்துள்ளன.
சீனாவின் இந்த செயலுக்கு ஐக்கிய நாடுகள் மன்றமும் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது லண்டன் நீதிமன்றத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சிலர் ஜின்ஜியாங் மாகாணத்தில் நடக்கும் கட்டாய கருக்கலைப்பு குறித்து குற்றம்சாட்டியுள்ளனர்.
சீன கம்யூனிஸ்ட் அரசின் இந்த செயல் மிகவும் கொடூரமானதாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் இருப்பதாக தற்போது ஐக்கிய நாடுகள் மன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பிரிவு செய்தி தொடர்பாளர் ரூட் காவில்லி கூறுகையில்,
இந்த கட்டாய கருக்கலைப்பால் பாதிக்கப்பட்ட உய்குர் இன மக்கள் தற்போது சீன அரசுக்கு எதிராக உலக அரங்கில் தங்கள் பிரச்னைகளை கூற முன்வந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லண்டன் நீதிமன்றத்தில் 9 சட்டத்தரணிகள் கொண்ட குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக உய்குர் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகி வருவதாகவும் மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபடுத்த படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவை அரசியல் ரீதியாக பழிவாங்க உலக உயிகுர் காங்கிரஸ் அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
தொழிலாளர் சட்டத்தை மீறி இந்த உய்குர் இன மக்கள் ஒரு நாளில் அதிக நேரம் வேலை வாங்கப் படுவதாகவும் தற்போது ஐநா உறுதிபட தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் உயிகுர் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தற்போது ஐநா முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.