அமெரிக்காவில் சீன தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை இரத்து!
தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக் கவலைகள் காரணமாக அமெரிக்காவில் சீனாவின் யுனிக்கொம் நிறுவனம் சேவைகளை வழங்குவதை இரத்துச் செய்துள்ளதாக அமெரிக்க ஃபெடரல் தொடர்பாடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கச் சந்தையில் இருந்து சீன அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு முகவரை வெளியேற்றுவதற்கான இந்த முடிவு, பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டுள்ளதோடு அவ்விதமான முகவர் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிற்குள் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் சீன யுனிகொம் நிறுவனத்தின் செயற்றிறனை முடிவுக்குக் கொண்டு வரும் உத்தரவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சீன அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு செயற்பாட்டாளரின் அதிகாரத்தைத் திரும்பப் பெறுவது அமெரிக்காவின் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கிறது என்று அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிறுவனத்தின் துணை நிறுவனமான சீன யுனிகொம் அமெரிக்காஸ் என்ற நிறுவனம் சீன அரசாங்கத்தின் செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது எனவும், பெய்ஜிங்கின் கோரிக்கைகளுக்கு இணங்கியே அந்நிறுவனம் செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், சீன அரசாங்கம் அமெரிக்க தகவல்தொடர்புகளை அணுகவும், சேமிக்கவும், சீர்குலைக்கவும் மற்றும் தவறாக வழிநடத்தவும் முடியும், இது அமெரிக்காவிற்கு எதிராக உளவு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட அனுமதிக்கும், செயற்பாடுகளாக அமைகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், சீனா யுனிகாம் அமெரிக்காஸ் அமெரிக்காவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வது தொடர்பான தீவிர கவலைகளை தவறிவிட்டது என்றும் அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா தனது நாட்டில் சீனா உளவு பார்ப்பதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பெய்ஜிங் பலமுறை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.