கனடாவில் விற்பனை செய்யப்பட்ட சில சொக்லட் டெசர்ட் குறித்து அவசர எச்சரிக்கை
கனடாவில் Costco கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ஒரு வகை சொக்லட் டெசர்ட் தயாரிப்பு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.
தயாரிப்பில் குறிப்பிடப்படாத அலர்ஜி (ஒவ்வாமை) ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டதால் அந்த தயாரிப்பு மீள அழைக்கப்பட்டுள்ளது. இதன்படி Mellow Food நிறுவனம் தயாரித்த “Delici Dubai Style Chocolate Dessert” என்ற லேயர்டு சாக்லேட் மூஸ் (chocolate mousse) தயாரிப்பின் சில தொகுதிகள் மீள பெறப்படுகின்றன.
இந்த தயாரிப்பில் லேபிளில் குறிப்பிடப்படாமல் காசியூ (Cashew) அல்லது மக்கடாமியா (Macadamia) பருப்பு இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது கடுமையான, உயிருக்கு ஆபத்தான அலர்ஜி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்பு பொதுவாக பிஸ்தா, பெல்ஜியன் பால் சொக்லட் மற்றும் கடாயிப் ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பொருட்கள் 76 கிராம் கொண்ட 6 கப் கொண்ட தொகுப்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அவற்றின் UPC எண் 812190020825 என்றும், Costco பொருள் எண் 1990644 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தயாரிப்புகள் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களுக்குள் கனடாவில் உள்ள Costco கடைகளில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசியூ அல்லது மக்கடாமியா பருப்பிற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த தயாரிப்பை சாப்பிட வேண்டாம் என்றும், வாங்கியவர்கள் அதை அருகிலுள்ள Costco கடைக்கு திருப்பி வழங்கி பணத்தை மீண்டும் பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.