பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! 38 பேர் பலி
காங்கோ நாட்டில் இகியுடர் மாகாணத்தில் உள்ள புரிசா என்ற ஆற்றில் 150 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்றிரவு அண்டை நகருக்கு புரிசா ஆறு வழியாக 150 பேர் கொண்ட படகு ஒன்று புறப்பட்டுள்ளது.
ஆற்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர். இந்த கோர விபத்தில் ஆற்றில் மூழ்கி 38 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 100 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.