ஆப்பிள் நிறுவனத்திற்கு 5.7 பில்லியன் டொலர் நஷ்டஈடு
காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஆப்பிள் நிறுவனம் 5.7 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நஷ்டஈடு வழங்க வேண்டும் என அமெரிக்க பெடரல் நீதிமன்ற ஜூரி உத்தரவிட்டுள்ளது.
டேக்ஷன் டெக்னாலஜி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் பயன்படுத்தப்படும் அதிர்வு உணர்வு தொழில்நுட்பமான ‘ஹாப்டிக் ஃபீட்பேக்’ தொடர்பான இரண்டு காப்புரிமைகளை ஆப்பிளின் ‘டாப்டிக் என்ஜின்’ மீறியுள்ளதாக ஜூரி தீர்ப்பளித்துள்ளது.
2021ஆம் ஆண்டு டேக்ஷன் டெக்னாலஜி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. எனினும், ஜூரியின் தீர்ப்பை ஆப்பிள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
தமது ‘டாப்டிக் என்ஜின்’ தொழில்நுட்பம் டேக்ஷன் நிறுவனத்தின் தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது எனத் தெரிவித்துள்ள ஆப்பிள், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஆப்பிள் வேண்டுமென்றே காப்புரிமையை மீறியதாக ஜூரி தீர்ப்பளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.