கனடாவில் எரிபொருள் விலையைக் குறைக்கப் புதிய முன்மொழிவு!
கனடாவில் டீசல் எரிபொருள் விலையைக் குறைக்கவும், எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடின்றி மலிவான விலையில் கிடைப்பதை உறுதி செய்யவும், டீசல் மீதான கூட்டாட்சி வரிகளை ரத்து செய்யும் புதிய திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருமான பியர் பொலியேவ் முன்மொழிந்துள்ளார்.
கனடா தனது தேசியத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு டீசலை உற்பத்தி செய்கிறது.
எனினும், உள்நாட்டுப் போக்குவரத்துப் பாதைகளில் உள்ள தடைகள் காரணமாகச் சில பிராந்தியங்கள் அமெரிக்க இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளதாகக் கன்சர்வேடிவ் கட்சி தெரிவித்துள்ளது.

உலகளாவிய எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து, ஒட்டாவா நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் கூட்டாட்சி எரிபொருள் கலால் வரியை தற்காலிகமாக இடைநிறுத்தியது. இந்த இடைநிறுத்தம் ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027 பெப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரை வழக்கமான கலால் வரியில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் கனடா தினம் வரையிலாவது டீசல் விற்பனை மீதான அனைத்து வரிகளையும் முழுமையாக நீக்க வேண்டும் என பொலியேவ் கோரியுள்ளார்.
கூட்டாட்சி எரிபொருள் கலால் வரி விலக்கை அடுத்த ஆண்டு ஜூலை 1 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் எரிபொருள் கொள்முதல் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.