கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஓநாய்
கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் அமைந்துள்ள கேப் பிரட்டன் ஹைலேண்ட்ஸ் தேசியப் பூங்காவின் மெக்கின்டாஷ் புரூக் பகுதியில் உலாவி வந்த ஓநாய் வகையைச் சேர்ந்த வனவிலங்கு ஒன்றை பூங்கா அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மாலை, மெக்கின்டாஷ் புரூக் பகுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணி ஒருவரை ஓநாய் ஒன்று தாக்கி கடித்தது.
இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும், சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட ஒநாய்தான் அந்தச் சுற்றுலாப் பயணியைத் தாக்கியதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை.
சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை நோக்கி அந்த கோயோட்டி மீண்டும் மீண்டும் நெருங்கி வந்தது. மனிதர்களைக் கண்டு அஞ்சும் அதன் இயற்கை குணம் மாறியிருந்ததும், உணவிற்காக மனிதர்களை அணுகும் அதன் ஆபத்தான நடத்தை தென்பட்டதுமே அது கொல்லப்பட்டதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் விலங்குகளைக் கவரும் உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், கூடுதல் எச்சரிக்கைப் பலகைகளையும் அமைத்து வருகின்றனர்.
பூங்காவின் மூடப்பட்ட பகுதிகள் மற்றும் எச்சரிக்கைப் பலகைகளை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக மதிக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளுக்கு ஒருபோதும் உணவளிக்கக் கூடாது என்றும் பூங்கா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.