ஐரோப்பியச் சந்தையை நோக்கிப் பார்வையைத் திருப்பும் கனடா!
அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் நீடித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த கனடா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கனடாவின் சில சிறு தொழில்களும் புதிய சந்தைகளைத் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கித் தங்களின் பார்வையைத் திருப்பி வருகின்றன. ஒட்டாவாவைச் சேர்ந்த 'எஸ்.எஃப்.ஆர் டிஸ்டிலரி' நிறுவனம், அமெரிக்கச் சந்தையில் தனது உற்பத்திகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டிருந்தது.
ஆனால், கனடாவின் சில பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள புதிய இறக்குமதித் தடையால் இத்திட்டம் முற்றிலும் முடங்கியுள்ளது.

இது குறித்து எஸ்.எஃப்.ஆர் டிஸ்டிலரியின் பொது மேலாளரும் தலைமை மது வடிப்பாளருமான ஆடம் பிரியர்லி கருத்து வெளியிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை முதல், அமெரிக்க நிர்வாகம் எடுத்துள்ள முடிவுகளின் காரணமாக, நமது பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது சட்டவிரோதமானதாக மாறவுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோ கடைகளில் 'பர்பன்' வகை மதுபானங்கள் அகற்றப்பட்டபோது, அதற்கு மாற்றாகவே இந்நிறுவனத்தின் முக்கிய விஸ்கி தயாரிக்கப்பட்டு எல்சிபிஓ கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.
உள்நாட்டுச் சந்தையில் நல்ல வளர்ச்சியைப் பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
தற்போது அமெரிக்கச் சந்தை கதவடைக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பாவை நோக்கித் தனது கவனத்தைத் திருப்புவதாக பிரியர்லி தெரிவித்துள்ளார்.
இதற்காக ஆண்டு முழுவதும் ஐரோப்பாவில் நடைபெறும் பெரிய வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்று, அங்குள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் இறக்குமதியாளர்களைச் சந்திக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.