முதிய பெண்ணிடம், காலில் விழுவது போல் நடித்து 20,000 டாலர் தங்க நகை பறிப்பு
கனடாவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட 78 வயதான முதிய பெண்மணி ஒருவரிடம் கவனத்தை திசைதிருப்பி 20,000 டாலர் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 28 ஆம் திகதி மாலை 6 மணியளவில் சிங்குவாக்கூசி வீதி மற்றும் பொவைர்ட் டிரைவ் வெஸ்ட் பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பு வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட முதிய பெண்மணியின் மகன் ராகவேந்திரா குமார் தெரிவிக்கையில், ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாத தனது தாயார், தம்மை நெருங்கிய பெண்ணை அண்டை வீட்டுக்காரர் என்று நினைத்துள்ளார்.

அப்போது அந்தப் பெண், நம்பிக்கையைச் சம்பாதிப்பதற்காக முதியவரின் கால்களைத் தொட்டு வணங்குவது போல நடித்து, அவரைக் கட்டியணைத்துள்ளார்.
அந்த சில விநாடிகளில், முதியவர் அணிந்திருந்த உண்மையான தங்கச் சங்கிலி மற்றும் தங்கக் காப்புகளைக் கழற்றிக்கொண்டு, அவருக்குத் தெரியாமல் ஒரு போலிச் சங்கிலியைக் கழுத்தில் மாட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
பின்னர் அருகில் நின்ற வெள்ளை நிற ‘செவ்ரோலெட் எக்வினாக்ஸ்’ ரக எஸ்.யு.வி காரில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வெறுமனே பண மதிப்புடையவை மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமானவை என்றும் ராகவேந்திரா குமார் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
"எனது தந்தை ஒரு பொற்கொல்லர், 1971 ஆம் ஆண்டு திருமணம் நடந்தபோது எனது தாயாருக்காக அவரே தன் கையால் இந்த நகைகளைச் செய்து பரிசளித்தார்.
எனது தந்தை 2008 இல் காலமானார். இதனால் இந்த நகைகள் எனது தாயாருக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானவை" என அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இதய நோயாளியான தனது தாயார், நடுங்கியவாறு வீட்டிற்கு வந்து சுமார் 30 நிமிடங்கள் பேச்சற்று இருந்ததாகவும், இந்த பயத்தின் காரணமாக தற்போது அவர் வெளியில் நடைப்பயிற்சி செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டின் பின்புறத்தில் மட்டும் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.