காஸா பகுதிக்கு தடையற்ற உதவிகள் வழங்க வேண்டுமென ஐ.நாவில் இலங்கை கோரிக்கை
காஸா பகுதிக்கு தடையற்ற மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அமர்வில் உரையாற்றிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான அவசர நடவடிக்கை, சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கான நியாயமான விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் குறித்துப் பேசிய அமைச்சர், காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள மக்களின் துயரங்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் போர்நிறுத்தத் தீர்மானத்தை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு எந்தவிதத் தடையுமின்றி மனிதநேய உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
காஸாவின் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார். மேலும், 1967 ஆம் ஆண்டிற்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில், இஸ்ரேலுடன் இணைந்து அமைதியாக இயங்கும் சுதந்திரமான பாலஸ்தீன அரசு அமைவதற்கு இலங்கை தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, உலகளாவிய உமிழ்வுகளுக்குக் மிகக் குறைவாகப் பங்களிக்கும் நாடுகளே, காலநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
'டித்வா' சூறாவளியைக் குறிப்பிட்ட அவர், அந்த இயற்கை பேரிடர் இலங்கையில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததுடன், 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்து, வாழ்வாதாரங்களையும் உள்கட்டமைப்புகளையும் கடுமையாகச் சேதப்படுத்தியதாகத் குறிப்பிட்டார்.
"காலநிலை நீதி என்பது அவசரமாகச் சாத்தியப்பட வேண்டிய ஒரு நிஜமாக மாற வேண்டும்," என வலியுறுத்தியுள்ளார். மேலும், 2030 ஆம் ஆண்டிற்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 2050 ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வையும் எட்டும் இலக்கை நோக்கி இலங்கை உறுதியுடன் பயணிப்பதாகக் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஆபத்தில் சிக்கிய கப்பலிலிருந்து மாலுமிகளை இலங்கை மீட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், தனது நாட்டின் நடுநிலைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டே, உயிர்களைக் காக்க இலங்கை விரைந்து செயல்பட்டதாகக் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை பெரு-பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டுள்ள போதிலும், கடன் சுமை மற்றும் வெளிப்புறப் பொருளாதார அதிர்ச்சிகளால் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, சர்வதேச நிதி அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், கடன் மற்றும் வளர்ச்சி நிதியுதவிகளுக்கு நியாயமான விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
உள்நாட்டுப் போரினால் எழுந்த எஞ்சிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அரசியல் தலையீடுகளின்றி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர்தல்களை முன்னெடுக்கவும் அரசு நிறுவனங்களைப் பலப்படுத்தி வருவதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.
தொழில்நுட்பங்களை அனைவரும் சமமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனக் கோரிய அவர், செயற்கை நுண்ணறிவை ஒழுக்கநெறி அடிப்படையில் பயன்படுத்துவதற்கான தேசிய வழிகாட்டுதல்களை இலங்கை உருவாக்கியுள்ளதாகவும் அமைச்சர் ஹேரத் ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியுள்ளார்.