துருக்கி நாடாளுமன்றத்தில் அடிதடி; ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதல்!
துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், கைகலப்பாக மாறி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் போது சர்ச்சைக்குரிய ஒருவரை நீதி அமைச்சராக நியமித்ததே மோதலுக்கு முக்கிய காரணம் என தெரிவிக்கபப்டுகின்றது.

சர்ச்சைக்குரிய ஒருவரை நீதி அமைச்சராக நியமித்ததே காரணம்
துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகன், இஸ்தான்புல் தலைமை அரச சட்டத்தரணியான அகின் குர்லெக்கை (Akin Gurlek) புதிய நீதி அமைச்சராக நியமித்திருந்தார்.
இந்நிலையில் குர்லெக் (Akin Gurlek) நாடாளுமன்றத்தில் பதவியேற்பதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்பட்ட போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் ச காணொளி வெளியாகியுள்ளது. புதிய நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அகின் குர்லெக், அரச சட்டத்தரணியாக இருந்தபோது பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பல வழக்குகளை முன்னெடுத்தவர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட எர்டோகனின் முக்கிய அரசியல் எதிரியாகக் கருதப்படும் இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கைது நடவடிக்கைகளுக்கு பின்னால் இவர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நீதி அமைச்சருடன் சேர்த்து, எர்சுரம் மாகாண ஆளுநர் முஸ்தபா சிஃப்ட்சி (Mustafa Ciftci) புதிய உள்நாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி விலகிய அமைச்சர்கள் தாமாகவே முன்வந்து பதவியிலிருந்து விலகியதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், இந்த அதிரடி மாற்றத்திற்கான உத்தியோகபூர்வ காரணங்கள் வெளியிடப்படவில்லை.
அதேவேளை துருக்கியில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடனான அமைதி முன்னெடுப்புகள் குறித்த விவாதங்கள் இடம்பெற்று வரும் சூழலில் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது