ஒன்டாரியோவில் பலத்த புயல்: சீரமைக்கப்படும் மின்சார விநியோகம்
தெற்கு ஒன்டாரியோவில் இந்த வாரம் வீசிய கடும் இடிமின்னலுடன் கூடிய புயலைத் தொடர்ந்து, மின்தடை ஏற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனால் மின்சாரமின்றி இருளில் மூழ்கியிருந்த கட்டிடங்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.
புதன்கிழமை சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. அபாயகரமான சூறாவளிக் காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்தன, மின்கம்பிகள் அறுந்து விழுந்தன, மேலும் முக்கிய நகரச் சாலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

டொராண்டோ தீயணைப்புத் துறைக்கு 24 மணி நேரத்திற்குள் சுமார் 1,500 அவசர அழைப்புகள் வந்தன. 2013 பனிப்புயலுக்குப் பிறகு ஒரே நாளில் பதிவான இரண்டாவது அதிகபட்ச அவசர அழைப்பு அளவு இதுவாகும்.
டொராண்டோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் புயல் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக நகர மேலாளர் பால் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களுள் டொராண்டோவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 50,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய ரொஜர்ஸ் மைதானமும் ஒன்றாகும்.
அங்கு வீசிய அதிவேகக் காற்றினால் பார்வையாளர் இருக்கைகள் பிடுங்கி எறியப்பட்டு, அரங்கின் சில பகுதிகள் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளன.
டொராண்டோவில் ஏற்பட்ட இந்தச் சேதங்கள் 'டவுன்பர்ஸ்ட்' காரணமாகவே நிகழ்ந்துள்ளதாக 'நார்தர்ன் டொர்னாடோஸ் புராஜெக்ட்' ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.