கனடாவில் குடியேற ஆசையுடன் காத்திருந்த சிறுமி: தாலிபான்களின் வெறிச்செயலில் பரிதாபம்
கனடாவில் குடியேற அனுமதி பெற்று ஆசையுடன் காத்திருந்த 10 வயது ஆப்கானிஸ்தான் சிறுமி தாலிபான்களின் சோதனைச்சாவடியில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் அமைப்பு ஒன்று ஆப்கானிஸ்தாலில் இருந்து வெளியேற ஆசைப்படும் அப்பாவி மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் 10 வயதேயான சிறுமி நஃபீசா தமது குடும்பத்துடன் திருமண விழாவில் கலந்துகொண்டு குடியிருப்புக்கு திரும்பும் வழியில் டிசம்பர் 10ம் திகதி துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதாக தெரியவந்துள்ளது.
தாலிபான்களின் சோதனைச்சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிறுமி நஃபீசா மற்றும் அவரது உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சிறுமி நஃபீசா குடும்பம் கனடாவுக்கு குடியேற அனுமதி பெறப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக சிறுமி கொல்லப்பட்டுள்ளது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கனேடிய துருப்புகளுக்கான முகாம்களில் பணியாற்றி வந்தவர் சிறுமி நஃபீசாவின் தந்தை பஷிர். இது தாலிபான்களுக்கும் தெரியும் என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
சிறுமி நஃபீசா மற்றும் ஐவர் குடும்பத்தினருக்கு கனடாவில் குடியேற அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு கடவுச்சீட்டு இல்லை என்பதால் கந்தஹாருக்குச் சென்று கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களுக்காகக் காத்திருந்தபோது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து குடியிருப்புக்கு திரும்பிய நிலையிலேயே, தாலிபான்களின் சோதனைச்சாவடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி நஃபீசா பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.