எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய கனேடிய மாகாண முதல்வர்: கொந்தளித்த மக்கள்
தடுப்பூசி மறுப்பாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஒப்பிட்டு பேசிய ஆல்பர்ட்டா முதல்வர் தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் ஜேசன் கென்னி, தடுப்பூசி மறுப்பாளர்கள் தொடர்பில் தவறான கருத்தை பதிவு செய்துள்ளதை ஒப்புக்கொள்வதாக கூறி, மன்னிப்பும் கோரியுள்ளார்.
தடுப்பூசி மறுப்பாளர்களை எய்ட்ஸ் நோயாளிகளுடன் ஒப்பிட்டு பேசி 14 மணி நேரத்திற்குள் மக்களின் எதிர்ப்பு காரணமாக முதல்வர் ஜேசன் கென்னி டுவிட்டர் பக்கம் ஊடாக மன்னிப்பு கோரியுள்ளார்.
புதன்கிழமை செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய முதல்வர், ஆல்பர்ட்ட மாகாணத்தில் மொத்தம் 750,000 பேர்கள் தடுப்பூசி மறுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி மறுப்பாளர்களால் நமது சமூகத்திற்கு மேலும் சிக்கலே என குறிப்பிட்டிருந்த அவர், இது தவறான முன்னுதாரணமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
1980களில் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் அவஸ்தைக்குள்ளானதை நாம் மறந்துவிட முடியாது என குறிப்பிட்டுள்ள ஜேசன் கென்னி, மக்கள் ஒதுக்கப்பட்டு, கைவிடப்பட்ட நிலையும் இருந்தது எனவும் அது போன்றதொரு சூழலை நாம் எதிர்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.
ஆனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்த ஒப்பீடுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஒரு முதல்வர் இவ்வாறான ஒப்பீடு மேற்கொள்ளலாமா என கேள்வி எழுப்பினர்.
முதல்வரின் எய்ட்ஸ் நோயாளி ஒப்பீட்டால் பலர் கவலையடைந்திருக்கலாம், ஆனால் தற்போது அவர் மன்னிப்பு கோரியுள்ளது அவர்களின் கவலைக்கு தீர்வகியிருக்கும் என கேபினட் அமைச்சர் மற்றும் மத்திய எட்மண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் Randy Boissonnault தெரிவித்துள்ளார்.