டிரம்பின் வரி விதிப்பிற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய சுங்க வரி உயர்வு நடவடிக்கைக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய வர்த்தக பங்களிப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குறிப்பாக, இந்த வரி உயர்வுக்கு எவ்வித நியாயமும் இல்லை என அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சாடியுள்ளார்.
கட்டாயத் தொழிலாளர் பயன்பாட்டைத் தடுப்பதற்கான வர்த்தகத் தடைகளை சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறி, சுமார் 60 நாடுகளின் இறக்குமதிகள் மீது 10% முதல் 12.5% வரை கூடுதல் சுங்க வரியை அமெரிக்க நிர்வாகம் வியாழக்கிழமை இரவு அறிவித்தது.

அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு டிரம்ப் தற்காலிகமாக விதித்திருந்த வரிகளின் காலக்கெடு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:01 மணிக்கு முடிந்த உடனேயே, இந்த புதிய வரிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
மாட்டிறைச்சி, தங்கம் மற்றும் தாமிரத்தின் முக்கிய ஏற்றுமதியாளரான அவுஸ்திரேலியா மீதான வரியை 12.5% ஆக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
நவீன அடிமைமுறைக்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மிகவும் தீவிரமாகவே அணுகுகிறது. இந்த கூடுதல் வரி உயர்வு முற்றிலும் நியாயமற்றது, இதைக் கைவிடுமாறு அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என வர்த்தக அமைச்சர் டான் ஃபாரெல், தெரிவித்துள்ளார்.
12.5% வரி உயர்வு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகவும், வர்த்தகத்தைப் பாதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் விசாரணையில் கட்டாயத் தொழிலாளர் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லை. வரிகள் வணிகங்களுக்கான செலவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் மட்டுமே அதிகரிக்கும்" என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எங்களது தொழிலாளர் சட்டங்களை அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் சிறந்த பணிச்சூழல் வழங்கப்படுகிறது. எனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எவ்வித அடிப்படையுமற்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் விமர்சித்துள்ளார்.
கட்டாயத் தொழிலாளர் முறையை தாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, இது தொடர்பாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜப்பான் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 12.5% வரியை எதிர்த்து அந்நாடு மேல்முறையீடு செய்துள்ளது.
ஏற்கனவே ஒப்புக்கொண்ட 10% வரியைத் தாண்டி கூடுதல் வரிகள் விதிக்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் உறுதியளித்திருந்ததை ஜப்பானிய அமைச்சரவை முதன்மைச் செயலாளர் மினோரு கிஹாரா சுட்டிக்காட்டினார்.
பரஸ்பர நன்மைகளைப் பேணும் வகையில் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. தென் கொரியா மீதான கூட்டு வரிகள் 15%-ஐத் தாண்டக்கூடாது என அந்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் அனைத்து விதமான சுங்க வரிகளையும் சீனா எதிர்ப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். வரிப் போர்களும் வர்த்தகப் போர்களும் எந்தவொரு தரப்பின் நலனுக்கும் உகந்ததல்ல எனஅவர் எச்சரித்துள்ளார்.