கனடாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கக்கூடாது என கோரிக்கை
கனடாவில் பிறந்த அனைவரும் தானாகவே கனடிய குடியுரிமை பெறும் தற்போதைய சட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி கோரியுள்ளது.
தற்போதைய சட்டப்படி, கனடாவில் பிறக்கும் யாரும், பெற்றோரின் குடியுரிமை நிலையைப் பொருட்படுத்தாமல், தானாகவே கனடிய குடியுரிமை பெறுகின்றனர்.
குடியுரிமை தானாக வழங்கப்படவேண்டியது, பெற்றோரில் குறைந்தது ஒருவராவது கனடிய குடிமகன் அல்லது நிரந்தர குடியிருப்பாளர் ஆனபோது மட்டுமே இருக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் குடியேற்ற விவகார விமர்சகர் மிசேல் ரெம்பல் கார்னர் தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தத்தை அரசாங்க சட்டமூலத்தில் சேர்க்க அவர் செவ்வாயன்று நாடாளுமன்ற குழுவில் முன்மொழிந்தார். ஆனால் லிபரல் மற்றும் ப்ளொக் க்யூபெக்கோயிஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து, அந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.
“பிறப்பால் குடியுரிமை வழங்கும் தற்போதைய சட்டத்தில் மாற்றம் செய்ய தேவையில்லை என நான் நம்புகிறேன் என நீதியமைச்சர் சான் ஃப்ரேசர் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இத்தகைய மாற்றங்கள் புதிய குடியேற்றத்தார்களை குறிவைக்கும் நடவடிக்கையாக மாறக்கூடும் எனவும், கனடாவில் எதிர்க்குடியேற்ற மனப்பான்மை அதிகரித்து வருவதாகவும் கனடிய குடியுரிமை நிறுவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.
இந்த விவாதம், கனடாவின் குடியேற்ற மற்றும் குடியுரிமை கொள்கைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கிடையேயான பெரும் கருத்து வேறுபாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.