அமெரிக்காவுடனான வர்த்தக போரை முடிக்க லிபரல்களுடன் இணைந்து செயற்படத் தயார்: பொய்லிவ்ரே
அமெரிக்காவுடன் தொடரும் வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக லிபரல் கட்சியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளுக்கு திரும்பும் முன், அவர் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு மேற்கொண்டார்.
இதில், சுமார் 15 நிமிடங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரையாற்றியிருந்தார். கடந்த பொதுத் தேர்தலின் போது மாற்றத்தை நேசிக்கும் கனடியர்கள் தமது கட்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர் எனவும், அந்த மாற்றத்திற்காக போராடுவதே கட்சி கடமையாக உள்ளது எனவும் பொய்லிவ்ரே, கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவுடன் உள்ள வர்த்தக சிக்கலை தீர்ப்பதற்காக, கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமர் மார்க் கார்னி உடன் எந்தவொரு வகையிலும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 28 தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 144 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது, எனினும் பொய்லிவ்ரே தனது தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்தார்.
எனவே, நாடாளுமன்றில் முன்னாள் கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஷியர் தற்காலிகமாக பொய்லிவ்ரேவுக்குப் பதிலாக செயல்பட உள்ளார்.
பொய்லிவ்ரே எதிர்பார்க்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வரை, அவர் நாடாளுமன்றத்தில் நேரடியாக பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.