நேபாளத்தில் தொடா் மழை ; 72 மணி நேரத்தில் 14 பேர் பலி
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் கடந்த 72 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
காத்மாண்டு பள்ளத்தாக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
மத்திய நேபாளத்தில் உள்ள நாராயணி நதி அபாய அளவான 9 மீற்றரைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் புகுந்ததையடுத்து, அப்பகுதி மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் முக்கிய போக்குவரத்து மையமான சித்வான் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை மாலை வரை மழையால் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலை மியாக்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்ததுடன், அருகிலுள்ள பாக்லுங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக பல மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் மக்களை வெளியேற்றி வருகின்றனர்.
இதுவரை ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.