ரஃபாவில் இஸ்ரேலுக்கு கட்டுப்பாடு ; மறுப்புத் தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம்
காஸாவின் ரஃபா நகருக்குள் இஸ்ரேல் ராணுவம் படையெடுப்பதைத் தடுக்க உத்தரவிடுவதற்கு நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
முன்னதாக, ரஃபா நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தத் தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அந்த இராணுவ நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடக் கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஃபா நகரில் பொதுமக்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது உண்மைதான்.
இருந்தாலும், காஸாவில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே கடந்த மாதம் (26.01.2024)ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
இது ரஃபா நகருக்கும் பொருந்தும். நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை இஸ்ரேல் ஏற்று நடந்தாலே போதும்.
ரஃபா நகருக்காக தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை என்று அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் கடந்த ( 07.10.2023) ஆம் திகதி நுழைந்த ஹமாஸ் படையினர், அங்கு சுமார் 1,200 பேரை கொடூரமாக படுகொலை செய்தனர்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்திவருகிறது.
குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக பொதுமக்கள் வடக்கு ந்து தெற்குப் பகுதிக்கு வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டது.
அந்த உத்தரவை ஏற்று தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனர்களின் கடைசி புகலிடமாக ராஃபா நகரம் திகழ்கிறது.
எனினும், அண்மைக் காலமாக ரஃபா நகரிலும் இஸ்ரேல் இராணுவம் தீவிர குண்டுவீச்சு நடத்தி வருவதில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
அத்துடன், விரைவில் அந்த நகருக்குள் தரைவழியாகவும் நுழைந்து தாக்குதல் நடத்தப் போவதாகக் கூறி இஸ்ரேல் அரசு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வாறு தாக்குதல் நடத்தினால் அது மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா.வும், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளும் எச்சரித்து வருகின்றன.