மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ (AI) நடிகைக்கு முதன்மை கதாபாத்திரம்!
ஹாலிவுட் திரையுலகில் கடந்த சில மாதங்களாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள 'டில்லி நார்வுட்' (Tilly Norwood) என்ற ஏஐ (AI - செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட "நடிகை", தற்போது ஒரு முழு நீளத் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். பிரிட்டனைச் சேர்ந்த 'பார்ட்டிகல்6' (Particle6) என்ற நிறுவனம் இந்த ஏஐ நடிகையை உருவாக்கியுள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கு 'மிஸ்அலைன்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மனித உணர்வுகளைப் பெறத் துடிக்கும் ஒரு ஏஐ-ஐப் பற்றிய நகைச்சுவை கலந்த நாடகத் திரைப்படமாக உருவாகவுள்ளது. பிரபல திரைப்பட விமர்சகர் ரிச்சர்ட் க்ரூஸ் இந்த முயற்சிக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையை நான் முற்றிலும் வெறுக்கிறேன். ஒரு மனித நடிகர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை, மனிதரல்லாத ஒரு ஏஐ-க்கு வழங்குவதை ஏற்க முடியாது. இது வெறும் விளம்பர உத்தி மட்டுமே. இந்த ஏஐ கதாபாத்திரங்களுக்கு சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை, ஏனென்றால் அது உண்மை இல்லை .

குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு (Gen Z) போலித்தனம் இல்லாத உண்மையான கலைகளே பிடித்துள்ளன. ஏஐ படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்களில் வரிசையில் நிற்க மாட்டார்கள்.
ஏனெனில், அந்த ஏஐ கதாபாத்திரங்களின் கண்கள் கூட உண்மையாகத் தெரிவதில்லை என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, டில்லி நார்வுட் என்ற ஏஐ கதாபாத்திரத்தை நிர்வகிக்கப் பல திறமையாளர் முகமைகள் ஆர்வம் காட்டியதாக பார்ட்டிகல்6 நிறுவனத்தின் நிறுவனர் எலைன் வான் டெர் வெல்டன் கூறியிருந்தார்.
அப்போதே, அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர்களின் சங்கமான 'சாக்-அஃப்ட்ரா' மற்றும் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான எமிலி பிளண்ட், வூப்பி கோல்ட்பர்க் ஆகியோர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
டில்லி நார்வுட் மட்டுமின்றி, கடந்த ஆண்டு மறைந்த பிரபல ஹாலிவுட் நடிகர் 'வால் கில்மர்' -ஐ ஏஐ மூலம் மீண்டும் உருவாக்கி, 'அஸ் டீப் அஸ் தி கிரேவ்' என்ற புதிய படத்தில் நடிக்க வைப்பதற்கான டிரெய்லர் அண்மையில் லாஸ் வேகஸில் நடந்த சினிமாக்கான் (CinemaCon 2026) நிகழ்வில் திரையிடப்பட்டது.