ஓட்டல் ஒன்றில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு! மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
துருக்கியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
துருக்கியில் அய்டின் மாகாணத்தில் உள்ள நசிலி மாவட்டத்தில் ஓட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் அந்த ஓட்டலின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெளியே பறந்து சென்று விழுந்தன.
அந்த கட்டிடத்தின் முகப்புபகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
தீயில் இருந்த தப்பிக்க இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக குதித்த இரண்டு பேர் உயிர் பிழைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்ததுடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மாகாண ஆளுநர் அனடோலு தெரிவித்துள்ளார்.