கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து ஓடும் ரயிலில் முத்த போராட்டம் நடத்திய பயணிகள்! பலரையும் ஆச்சர்யப்படுத்திய சம்பவம்
ரஷ்யாவில் கொரோனா பரவலுக்காக விடுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து, ரயிலில் 30 ஜோடிகள், முத்தம் கொடுத்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனாவால் 2020ம் ஆண்டு முழுவதும் மக்களுக்கு போராட்டம் மிகுந்த ஆண்டாக மாறி விட்டது. ஓரளவுக்கு கட்டுப்பட்டிருந்த கொரோனா வைரஸ், ரஷ்யாவில் தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக இசைக் கச்சேரிகளை ரத்து செய்யவும், இரவு 11 மணிக்கு மேல் பார்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொட்ரோ ரயில்களில், ஒரு குழு ‘‘முத்த போராட்டம்’’ நடத்தி உள்ளனர். ரஷ்யாவிலுள்ள யெகாடெரின்பர்க்கில், கூட்டம் நிரம்பிய மெட்ரோ ரயில் ஒன்றில், திடீரென தங்கள் முகமூடிகளை கழற்றிய ஒரு குழுவினர், முத்தம் கொடுத்தனர். 30 ஜோடிகள் பங்கேற்ற இந்த முத்த போராட்டத்தை, சற்றும் எதிர்பார்க்காத ரயில் பயணிகள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
சிறிது நேர முத்த போராட்டத்துக்குப்பின், அடுத்த மெட்ரோ ஸ்டேஷனான மாஷினோஸ்ட்ரோயிட்லி வந்தவுடன், எதுவும் அறியாதது போல், தங்களது மாஸ்க்குகளை அணிந்து கொண்டு, போராட்டக்காரர்கள், கூட்டத்துடன் கலந்து கலைந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. யாரையும் புண்படுத்தும் நோக்கில், இப்போராட்டத்திற்கு தாங்கள் திட்டமிடவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
மேலும், அதில், மக்கள் நெரிசலான பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவது அபத்தமானது என்று எதிர்ப்பாளர்கள் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.