ஒரே வாரத்தில் 700% அதிகரிப்பு... கடந்த 24 மணி நேரத்தில் லட்சம் கடந்த பாதிப்பு
இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் முதல்முறையாக ஒரே நாளில் ஒரு லட்சம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தை ஒப்பிடுகையில் இது 700 சதவீத அதிகரிப்பு என சுகாதாரத்துறை நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் புதிய மாறுபாடுகளால் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகிறது.
தற்போது ஓமிக்ரான் மாறுபாடு உலக நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து காணப்படுவதால், பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தியாவில் 5 மாநில தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட அரசியல் தலைவர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஒரு லட்சம் என தெரிய வந்துள்ளது.
கடைசியாக ஜூன் 6ம் திகதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சம் தொட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்னர் பதிவான கொரோனா பாதுப்பு எண்ணிக்கையை ஒப்பிடுகையில், இந்தியாவில் தற்போது நாளுக்கும் சராசரியாக 1738% பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 27ம் திகதி 6,358 என பதிவாகியிருந்த பாதிப்பு எண்ணிக்கை ஜனவரி 6ம் திகதி 1,16,900 என அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 10 நாட்களில் 6,000 எண்ணிக்கையில் இருந்து 100,000 எண்ணிக்கை என அதிகரித்துள்ளதை சுகாதாரத்துறை கவலையுடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதேபோல், டென்மார்க், போர்ச்சுகல், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27ம் திகதி முதல் ஜனவரி 2ம் திகதி வரையிலான ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 71 சதவீதம் அதிகரித்துள்ளது என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.