வரி விதிப்பேன் என மிரட்டினேன் ; இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தினேன், மீண்டும் மார்தட்டும் ட்ரம்ப்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் உட்பட ஏழு போர்களை தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ஏழு போர்களில் நான்கு போர்களை, வரி விதிப்பு மற்றும் வர்த்தகத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
100% வரி விதிப்போம்
"நான் அவர்களிடம் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து போரிட்டால், உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம், மேலும் 100% வரி விதிப்போம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அனைவரும் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்" என்று கூறினார்.
மேலும், "நான் இந்த எல்லாப் போர்களையும் நிறுத்தியுள்ளேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்க வேண்டியது! அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும்.
இரு நாடுகளும் 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின. 24 மணி நேரத்திற்குள் சண்டையை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகம் நிறுத்தப்படும் என்று நான் எச்சரித்ததால்தான் போர் நின்றது" என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஆனால் எந்த நாட்டு ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை.