புதிய வகை கொரோனா இவர்களைத் தான் அதிகம் தாக்கும்; உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்
புதிய வகை கொரோனா வைரஸ் இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.
இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் ரத்து செய்துள்ளன.
இந்த வைரஸ் பரவல் உலக நாடுகளை பேரதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு பரிசோதித்ததில் கொரோனாவின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதுவும் இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது போலவே வீரியமாக பரவும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய நாடுகளுக்கான பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்லுகே இந்தத் தகவலை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு நிலமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரம் ஆக்குவது அவசியம்.
புதிய வகை கொரோனா இளைய வயதினர் மத்தியில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்றார்.