விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலுடன் நான்கு மணிநேரம் பயணம்; தம்பதியினர் வேதனை
கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் உயிரிழந்த பயணியொருவரின் உடலுடன் பயணித்த அனுபவங்களை அவுஸ்திரேலிய தம்பதியினர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
வெனிசிலிருந்து தங்களின் கட்டார் எயர்வேய்ஸ் விமானத்தில் பயணித்த மிச்செல் ரிங்கும் ஜெனிபர் கொலினும் மெல்பேர்னிலிருந்து டோஹா பயணத்தின்போது தங்கள் விமானத்தில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்தார் என அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
திடீரென உயிரிழந்த பெண் பயணி
விமானபணியாளர்கள் போர்வையால் சுற்றி அந்த உடலை தங்களிற்கு அருகில் வைத்ததாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய தம்பதியினர், விமானத்தில் வேறு ஆசனங்கள் காலியாகயிருந்த போதிலும் நான்கு மணித்தியாலங்கள் அந்த உடலை தங்களிற்கு அருகிலேயே வைத்திருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
கட்டார் எயர்வேய்ஸ் இதனால் ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளதுடன் குறிப்பிட்ட பயணிகளை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரை எவரும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என அவுஸ்திரேலிய தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயணிகளை கவனித்துக்கொள்வதற்கான விதிமுறைகள்அவசியம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களுடன் விமானத்தில் பயணித்த பெண் மயங்கிவிழுந்ததும் விமானபணியாளர்கள் உடனடியாக தங்களால் முடிந்தஅனைத்தையும் செய்தனர் என தெரிவித்துள்ள ரிங், ஆனால் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை அதனை பார்ப்பது துரதிஸ்டவசமானதாகயிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் உடலை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றனர் ஆனால் அவர் மிகவும் பருமனானவராக காணப்பட்டதால் அது முடியவில்லை என்றும் கூறினார்.
அதன் பின்னர் ,எங்களிற்கு பின்னால் ஆசனங்கள் இருப்பதை விமானப்பணியாளர்கள் அவதானித்தனர் சற்றே விலக முடியுமா என கேட்டபோது நாங்கள் ஆம் என்றோம். அதன்பி பணியாளர்கள் தான் அமர்ந்த ஆசனத்தில் உடலை வைத்தனர் என ரிங் தெரிவித்துள்ளார்.