கனிமங்களை அமெரிக்காவுடன் பகிர்வதற்கு உக்ரைன் இணக்கம்
அமெரிக்காவுடன் கனிமங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலான ஒப்பந்தத்தை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் உண்மையில் பல நல்ல திருத்தங்களுடன் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளோம் இதனை சாதகமான விடயமாக பார்க்கின்றோம் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய கோரிக்கை
கனிமங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்ககூடிய வருமானத்தில் 500 பில்லியன் டொலருக்கான உரிமங்களை முன்னர் அமெரிக்கா கோரியிருந்தது.
எனினும் அந்த நிபந்தனையை அமெரிக்கா கைவிட்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் , உக்ரைன் கோருகின்ற பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கவில்லை என தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு உத்தரவாதம் என்பது உக்ரைனின் முக்கிய கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கை குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்காத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்த உடன்படிக்கையை உக்ரைன் ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து போரிடுவதற்கான உரிமை உக்ரைனிற்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள உக்ரைன் ஜனாதிபதி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார் என தான் எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைனியர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் என தெரிவித்துள்ள டிரம்ப், அமெரிக்காவின் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் இல்லாவிட்டால் இந்த யுத்தம் குறுகிய காலத்தில் முடிவிற்கு வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.