கனடாவில் கிரிக்கெட் பந்து அளவில் பெய்த ஆலங்கட்டி மழை!
கனடாவில் கடந்த திங்கட்கிழமை பெய்த பலமான ஆலங்கட்டி மழை, கார் கண்ணாடிகள் உடைத்து பயணிகளை அதிர வைத்துள்ளது.
கனடாவின் மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டாவை சூறாவளி தாக்கியதை அடுத்து இந்த பயங்கரமான ஆலங்கட்டி மழை ஏற்பட்டது என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த புயல் சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் நீடித்ததாகவும், சுமார் 34 வாகனங்கள் இதனால் சேதமடைந்ததாகவும் தி ராயல் கனடியன் மவுண்டட் பொலீஸ் (RCMP) தெரிவித்தனர். பலருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா கட்டிகளும் திராட்சை பழ அளவில் இருந்து கிரிக்கெட் பந்து அளவு வரை இருந்ததாகவும், அரிதாக ஒரு மூன்று இடங்களில் பேஸ்பால் அளவிலான ஆலங்கட்டி கற்கள் விழுந்து கொஞ்சம் பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலைத் தொடர்ந்து பலர் தங்கள் கார்களின் மேல் A ஆலங்கட்டி கற்கள் விழுந்து சேதமடைந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
பயமுறுத்தும் 17 நிமிடங்கள் என்று கேப்ஷன் இட்டு காரின் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் ஒருவர் கேஷுவலக விடியோ எடுத்து பதிவிட்டிருக்கிறார். முன் சீட்டில் அமர்ந்திருக்கும் இருவரும் பயத்தில் கைகளால் தலையை பாதுகாத்துக் கொண்டு அமர்ந்துள்ளதை வீடியோவில் காண முடிகிறது.
காலநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற அபாயகரமான ஆலங்கட்டி மழைகளை வருங்காலத்தில் இன்னும் நிறைய பார்க்க நேரிடலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.