வெள்ளம் காரணமாக பதவியிழந்த மாகாண முதல்வர்
ஸ்பெய்னில் வெள்ளம் காரணமாக மாகாண முதல்வர் ஓருவர் பதவியிழக்க நேரிட்டுள்ளது.
ஸ்பெய்னின் வலென்சியா மாகாண முதல்வர் கார்லோஸ் மாசோன் கடந்த ஆண்டு நிகழ்ந்த கடுமையான வெள்ளப் பேரழிவை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுகளின் காரணமாக பதவி விலகியுள்ளார்.
சில மாதங்கள் நீண்ட அழுத்தத்துக்குப் பின்னர் அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார். 2024 அக்டோபர் 29 அன்று ஏற்பட்ட அந்த பேரழிவில், வலென்சியா மாகாணத்திலேயே 229 பேர் உயிரிழந்ததுடன், அண்டை மாகாணங்களில் மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

கடுமையான இயற்கை பேரழிவு
இது கடந்த பல தசாப்தங்களில் ஸ்பெயினில் நிகழ்ந்த மிகக் கடுமையான இயற்கை பேரழிவாகக் கருதப்படுகிறது.
மாசோனின் செயல்பாட்டின்மையே அந்த பேரழிவின் பாதிப்பை அதிகரித்தது என பலர் குற்றம் சாட்டினர்.
அவர் வெள்ளநீர் பல ஊர்களில் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தபோதும், ஒரு செய்தியாளரான மரிபெல் விலாப்லானாவுடன் சுமார் நான்கு மணிநேரம் ஒரு உணவகத்தில் இருந்தது பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த நாளில் பெரும்பாலான அவசரக் கூட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், வலென்சியா மக்களுக்கான அவசர எச்சரிக்கை குறுஞ்செய்தி மாசோனின் நிர்வாகம் மூலம் இரவு 8 மணிக்குப் பின் மட்டுமே அனுப்பப்பட்டது, அதற்குள் ஏராளமானோர் ஏற்கனவே உயிரிழந்திருந்தனர்.
நான் இனி தொடர முடியாது... தவறுகள் நடந்தன, அதை ஒப்புக்கொள்கிறேன், அவற்றை வாழ்நாள் முழுவதும் தாங்கிக்கொள்வேன். அந்த நாளில் எனது அட்டவணையை ரத்து செய்து நெருக்கடியை நேரடியாக கையாள வேண்டியிருந்தது,” என மாசோன் தெரிவித்துள்ளார்.
அவரது தவறுகள் அரசியல் நோக்கம் அல்லது தீய எண்ணங்களால் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். மாசோனின் கட்சி பீப்பிள்ஸ் பார்ட்டி (PP) சார்ந்தவர்.
கருத்துக்கணிப்புகள் படி, வலென்சியா மக்களின் பெரும்பான்மையும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று விரும்பினர்.
கடந்த சில மாதங்களாக மாதந்தோறும் போராட்டங்கள் நடைபெற்றன — சமீபத்தியது அக்டோபர் 25 அன்று சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர்.