இங்கிலாந்தில் நெருக்கடிநிலை; களமிறக்கப்பட்ட ராணுவத்தினர்!
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் எழுந்துள்ள ஆள் பற்றாக்குறையை சமாளிக்க மருத்துவமனைகளில் ராணுவ டாக்டர்களும், பணியாளர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் நேற்று முன்தினம் காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 756 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 231 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரத்து 65 ஆக உயர்ந்தது. பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 515 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் லண்டனில் என்.எச்.எஸ். மருத்துவ,மனைகளில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால் அங்குள்ள பல மருத்துவமனைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்பட்டு, அறுவை சிகிச்சைகள் ஒத்தி போடப்பட்டுள்ளன.
அதேவேளை லண்டன் மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் கடந்த மாதம் தலா 1,100 பேர்தான் சிகிச்சை பெற்றனர். தற்போது இது 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக என்.எச்.எஸ். ஆஸ்பத்திரிகளில் 200 ராணுவ வீரர்கள் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராயல் நர்சிங் கல்லூரி இயக்குனர் பேட்ரிசியா மார்குயிஸ் கூறுகையில்,
“பணியாளர் நெருக்கடி இருப்பதை அரசாங்கத்தால் மறுக்க முடியாது என்பதைத்தான் ராணுவத்தினரை பணிக்கு அனுப்பி இருப்பது காட்டுகிறது” என தெரிவித்தார்.
ராணுவ மந்திரி பென் வாலஸ் கூறும்போது,
“நாட்டை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்கு என்.எச்.எஸ். ஆஸ்பத்திரிகளில் அர்ப்பணிக்கப்பட்ட தங்கள் சகாக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நமது பாதுகாப்பு படைகளில் உள்ள ஆண்களும், பெண்களும் மீண்டும் செல்கிறார்கள்” என குறிப்பிட்டார்.
மேலும் பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் தலைவர் சாந்த் நாக்பால் தெரிவிக்கையில்,
“இதற்கு முன்னர் ஆஸ்பத்திரிகளில் இந்த அளவுக்கு பணியாளர்கள் பணிக்கு வராமல் இருந்ததை நாங்கள் பார்த்தது இல்லை. இது இயல்பானது அல்ல. என்.எச்.எஸ். மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறது என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய அழுத்தத்தாலும், பணியாளர்கள் பற்றாக்குறையாலும் ஏற்படுகிற விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் , கவலைக்குள்ளாகிற சூழல் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.