அமெரிக்காவில் இந்திய குடும்பங்களுக்கு புதிய நெருக்கடி ; H-4 பணி அனுமதி ரத்து
அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களின் துணைகளுக்கு வழங்கப்பட்டு வரும் எச்-4 (H-4) பணி அனுமதியை ரத்து செய்வதற்கான முன்மொழிவு, அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) 2026ஆம் ஆண்டுக்கான நீண்டகால ஒழுங்குமுறை நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், எச்-1பி விசாதாரர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணியாற்றுவதற்கு வழங்கப்படும் வேலை அனுமதி பாதிக்கப்படலாம்.

2015ஆம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்ட விதியை மாற்றியமைக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக நீண்டகாலமாக காத்திருக்கும் எச்-1பி விசாதாரர்களின் குடும்பங்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
எச்-4 பணி அனுமதிகளில் பெரும்பகுதி இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டம் இந்தியக் குடும்பங்கள் மத்தியில் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வேலை செய்து வரும் துணைகளின் வருமானம் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில், பணி அனுமதி ரத்து செய்யப்பட்டால் அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் குடும்ப வருமானம் பாதிக்கப்படக்கூடும்.
இதேவேளை, தற்போது செல்லுபடியாகும் எச்-4 பணி அனுமதிகள் உடனடியாக ரத்து செய்யப்படவில்லை. இந்த நடவடிக்கை தற்போது ‘Long-Term Action’ எனும் நீண்டகால நடவடிக்கையாக மட்டுமே ஒழுங்குமுறைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முதலில் முறையான முன்மொழிவு விதியை வெளியிட வேண்டும்.
அதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டு, சட்ட மற்றும் நிர்வாக ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் பின்னரே இறுதி விதி அமுலுக்கு வர முடியும்.
எனவே, தற்போதைய எச்-4 பணி அனுமதிதாரர்கள் உடனடியாக வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கருத முடியாது. இதனிடையே, அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த முன்மொழிவு பார்க்கப்படுகிறது.
எச்-1பி விசா தொடர்பான பிற கட்டுப்பாடுகளும் அதிகரித்து வரும் நிலையில், எச்-4 விசாதாரர்களுக்கான பணி அனுமதி விவகாரம் இந்தியக் குடும்பங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.