மோசமான பொருளாதார நெருக்கடி; டொலர்கள் மீதான தடையை நீக்கிய கியூபா!
வங்கிகளில் அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கியூபா அரசாங்கம் திங்கட்கிழமை நீக்கியுள்ளது.
கியூபாவிலுள்ள வங்கிகளில் 2021 ஜூனில் கியூப அரசாங்கம் இத்தடையை அமுல்படுத்த ஆரம்பித்தது.
கியூபா மீதான அமெரிக்காவின் தடைகள்
கியூபா மீதான அமெரிக்காவின் தடைகள் தொடர்வதால் ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் காரணமாக இத்தடையை அமுல்படுத்துவதாக அப்போது கியூப அரசாங்கம் தெரிவித்திருந்தது.
தற்போது, சுமார் 2 வருடங்களாகும் நிலையில், இத்தடையை நீக்கப்பட்டுள்ளதாக கியூபாவின் மத்திய வங்கி திங்கட்கிழமை அறிவித்;துள்ளது.
30 வருடங்களில் இல்லாதளவு மோசமான நெருக்கடி
கடந்த 30 வருடங்களில் இல்லாதளவு மோசமான பொருளாதார நெருக்கடிகளை கியூபா எதிர்கொண்டுள்ளது.இந்த நிலையில், டொலர் வைப்பீடு மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலின் பின்னர் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதறகும் இது அவசியம் என கியூபா கருதுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் கியூபா மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்திருந்ததனால் டொலர்களில் பரிவர்த்தனை செய்வதற்கு கியூபா சிரமப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவி வகித்த காலத்தில் கியூபா மீதான தடைகள் தளர்த்தப்பட்டன. அதன் பின்னர் , டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக வகித்தபோது கியூபா மீதான தடைகள் அதிகரிக்கப்பட்டன.
அதோடு ட்ரம்பின் பதவிக் காலத்தின் இறுதி நாட்களில், பயங்கரவாதத்துக்கு அனுசரணை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபாவை அமெரிக்கா மீண்டும் இணைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.