அமெரிக்க பொருளாதாரத் தடையை தொடர்ந்து எதிர்க்குமாறு கனடாவிடம் கியூபா கோரிக்கை
அமெரிக்கா விதித்துள்ள பல தசாப்த கால பொருளாதாரத் தடைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கனடா தொடர்ந்து பேண வேண்டும் என கியூபா கேட்டுக்கொண்டுள்ளது.
கியூபாவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா தனது அழுத்தங்களை அதிகரித்து வரும் பின்னணியில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"கடந்த காலங்களைப் போலவே கனடா இப்போதும் எங்களுடன் நிற்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்று கனடாவுக்கான கியூபா தூதர் ரொட்ரிகோ மால்மியெர்கா டயஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் இந்தத் தீவிரமான பொருளாதாரத் தடை மக்களின் உயிரைப் பறிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார, வர்த்தக மற்றும் நிதித் தடைகளை நீக்கக் கோரி 1992 முதல் ஒவ்வொரு ஆண்டும் கியூபாவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னரும் பலமுறை இத்தீர்மானத்திற்கு ஆதரவாகக் கனடா வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என கியூப தூதர் உறுதியளித்துள்ளார்.